Monday, May 27, 2013

விஸ்வநாத மாமா


         எங்கள்  அக்ரஹாரத்து  வீதிகளில்  ஒரு  முதியவர்  கையில்  பூக்குடலையும்  மற்றொரு  கையில்  மணியும்  எடுத்து   அமராவதி  கரையை  நோக்கி  மெதுவாக  நடந்து  செல்வார். சிவத்த  தேகம், வழுக்கை  தலையில்  அடர்த்தி  இல்லாத  நரைத்த  குடுமி, வட்டவடிவான  முகம், அதில்  தீட்சண்யமான ஒரு  பார்வை, திறந்த  மேனியின் தோளில்  ஒரு  மேல்  துண்டு , முப்புரி  நூல் , இடையில்  கௌபீனமும்  வேஷ்டியும்  இவரது  அடையாளங்கள்.

பனை  ஓலை  விசிறியால்  மெல்ல  விசிறிக்கொண்டே, வீட்டு முற்றத்தின்  அருகே  உள்ள  ஊஞ்சலில்  படுத்திருப்பார்.

தக்ஷிணாமூர்த்தி கோவில்  பூஜை  செய்யும்  விஸ்வநாத  மாமா  என்றால் ஊரில்  அனைவருக்கும்  ஒரு  பயம்  கலந்த  மரியாதை. ஏனைய கோவில்கள்  போல்,இந்த  கோவில்  ஆகம  பிரதிஷ்டை  அல்ல, வைதீக  பிரதிஷ்டை. எனவே  சிவாச்சாரியார்  அல்லாத  வைதீகரான  விஸ்வநாத  மாமா  பூஜை  செய்து  வந்தார்.

அவர் ஒரு strict officer என்றே  கூறலாம்.தபால்  துறையில்  பணியாற்றி  ஓய்வு பெற்ற மத்திய  அரசு  ஊழியரும்  கூட. செய்யும்  செயல்கள்  அனைத்தும்  நேர்த்தியாக  செய்ய  வேண்டும்  என்ற  எண்ணம்  உடையவர். அதனால், யாரேனும் ஏதாவது  பிசகு  செய்தால்  உடனே  கோபம்  வந்து  வசை  பாடி  விடுவார். வந்த  வேகத்தில்  அந்த  கோபமும்  மறைந்துவிடும். மனதில்  எதையும்  எள்ளளவும்  வைத்து  கொள்ள  மாட்டார்.  கிட்டத்தட்ட  ஒரு  குழந்தை  மாதிரி  என்று  சொல்லலாம். எனவே  அவருக்கு  துர்வாசர்  என்ற  பட்டப்பெயரும்   உண்டு .

மாதம் தோறும்  அமாவாசை  தர்ப்பணங்களும், வருடம்தோறும்  ஆவணி  அவிட்ட  உபாகர்மாவும்  இவர்  தலைமையில்  தான்  நடக்கும்.

இவர்  கையால்  உபநயனம்  மற்றும்  தலை  ஆவணி  அவிட்டம்  செய்விக்கப்பட்டது  எனக்கு  கிடைத்த  பெரும்  கொடுப்பினை.
விஸ்வநாத  மாமா  கை  தேர்ந்த  வைதீகர்  மட்டுமல்ல.  ஆங்கிலத்திலும்  சமஸ்க்ரிதத்திலும்   கூட  நல்ல  புலமை  கொண்டவர்.

திண்ணையில்  அமர்ந்து  நான்  தப்பும்  தவறுமாக  ஆங்கிலம்  படிக்கும்  பொழுது  அவர்  பலமுறை  திருத்தி  கொடுத்திருக்கிறார். ஷேக்ஸ்பியர்  பற்றி  சொல்லுவார், சில சமயம் கீட்ஸ் வார்த்தைகளை நினைவுக்கு கொண்டு  வருவார்.

காசநோயினால்  மருத்துவமனையில்  நான்  அவதிப்பட்ட  சமயங்களில்  இவர்  தன்  கைப்பட  உணவு  சமைத்து  அனுப்பி  இருந்தார். அவர்  சமையலில்  சுவையுடன்  இறை  அருளும்  கலந்திருக்கும்  என்பது  எனக்கு  அப்போது  தான்  தெரிந்தது.

ஜோதிட சாஸ்த்திரத்திலும்  கை  தேர்ந்தவர் இவர் .

வாரம் தோறும் சனிக்கிழமைகளில்  கிருஷ்ணன்  கோவிலில்  பஜனை  சம்ப்ரதாயங்களை  திறம்பட  செய்வார். யார்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் சனிக்கிழமை  இரவுகளில் கோவிலில்  இவரது  பஜனை  நடந்துகொண்டே இருக்கும்.

கர்நாடக  இசையில்  தனிப்பெரும்  புலமை  பெற்றவர்  இவர். தியாகராஜரின்  பஞ்சரத்ன கீர்த்தனைகளும்  இவருக்கு  தெரியும்.   அக்ரஹாரத்தில்  பலரும்  இவரிடம்  அஷ்டபதி, சௌந்தர்யலஹரி, திருப்புகழ்  என  போட்டி  போட்டு  கற்றுக்கொண்டுள்ளனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தன் தமக்கைகளுக்கு நல்ல  இடத்தில  மணமுடித்து  வைத்தார். இறுதிவரை  இவர் திருமணம் செய்து  கொள்ளவில்லை.  இவரது  தம்பி சதாசிவ மாமா  தான்  இவருக்கு  துணையாக  கோவில்  வேலைகளை  பார்த்து  வந்தார்.

இவ்வாறு வைதீகம், இசை, பஜனை, ஜோதிடம், பன்மொழிப்புலமை, சமையல், என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய விஸ்வநாத மாமா தனது 84-வது வயதில் சிவலோக பதவி அடைந்தார்.

அதன் பிறகு சதாசிவ மாமா கலவை-யில்  உள்ள ஆசிரமத்தில் வசித்து வந்தார். அவரும்  தனது 89-வது  வயதில்  இறைவனடி  சேர்ந்தார்.

இப்பொழுதும்  தக்ஷிணாமூர்த்தி  கோவிலில்  பூஜைகள்  நடக்கிறது , அபிஷேகம்,ஆராதனைகள் நடக்கின்றன. ஆனால்,  சாந்நித்யத்தை  உணர  முடியவில்லை. விஸ்வநாத (துர்வாச) மாமா-வின் இடத்தை  நிரப்புவதற்கு  யாருமே  கிடையாது. வெறுமை  தான்  விஞ்சி இருக்கிறது.